Friday, September 30, 2011

இது ஒரு மொக்கை கதை


அத்தியாயம் இரண்டு
கோவையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது அந்தப் பள்ளி. இந்தியத் துணைக் கண்டம் ஒளியை விட்டு விலகி இருளில் பயணம் செய்யத் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. பள்ளி வளாகத்துள்ளேயே அமைந்திருக்கிறது மாணவர் விடுதி. அவ்விடுதியின் மேற்கு மூலையில் உள்ள அறையிலிருந்து மெல்ல தலையை விட்டு எட்டிப் பார்த்து யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் வெளிப்பட்டான் கணேஷ். நீல நிற கட்டம் போட்ட கைலி மற்றும் நீல நிறத்தில் சாயம் போன முழுக்கை சட்டை அணிந்திருந்தான். பூனை நடையுடன் வேகமாக அக்கட்டடத்தின் நடுவில் உள்ள மாடிப் படியருகில் வந்து மீண்டுமொரு முறை யாருமில்லை என்று உறுதி செய்து கொண்ட பின் தன்னை கவனித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் சுரேஷ் மற்றும் ரமேஷை கையை உயரத் தூக்கி ஆட்டி மெல்ல வருமாறு சைகை செய்தான்.
மூவரும் மெல்லக் கீழே இறங்கினார்கள். அந்தப் பரந்த வளாகத்தில் பிறை நிலவைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. மாணவர்கள் அனைவரும் கட்டாய விடுதி உணவை உட்கொள்ளச் சென்றிருந்தனர். வரிசையாக மரங்கள் வளர்ந்திருந்தது இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்த மரங்களுக்கு இடையே புகுந்து காம்பௌண்டு சுவர் ஏறிக் குதித்து ரோட்டை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினர்.

அத்தியாயம் ஒன்று
இந்த மும்மூர்த்திகளை பின் தொடர்ந்து செல்வதற்கு முன், விடுதியில் சென்ற அத்தியாயத்துக்கு சற்று முன்னர் நடந்த இன்னொரு சம்பவத்தை பார்த்து விடுவோம்.
அன்றைய வகுப்புகள் முடிந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. பூமி இன்னும் இருளை நெருங்கவில்லை. மாணவர்கள் தத்தமது அறைகளில் சரணடைந்திருந்தார்கள். தனக்குப் பிடித்த, தான் விளையாடும் கால்பந்து அணியின் பச்சை நிற டீ ஷர்ட்டை அணிந்து கொண்டான் சுரேஷ். ஏற்கனவே முடிவு செய்தபடி சிடி பிளேயரில் சினிமா பாடல்களை அலற விட்டான். ஆனாலும் அவன் மனது படபடத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்குப் பின் ரௌண்ட்ஸ் வரப் போகும் வார்டனை நினைத்து பயம் முளைத்தது. ஒரு வேளை நம் திட்டத்தை கண்டு பிடித்து விடுவாரோ என்ற பயத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். ரமேஷோ எந்த பயமும் இல்லாமல் ஹாயாக சைட்டடித்துக் கொண்டிருந்தான் சுவற்றோடு இருந்த நமீதாவை.
சரியாக ஐந்து நிமிடத்தில் மாடிப் படியேறி வந்தார் விடுதி வார்டன் பொன்னம்பலம். அவரிடம் ஒரு பழக்கம். எங்கேனும் நடந்து சென்றால் தலையை இடதிலிருந்து வலமாகவும், வலதில் இருந்து இடமாகவும் ஒடித்து திருப்பிக் கொண்டும் இல்லாத கழுத்துச் சுளுக்கை எடுத்துக் கொண்டும் நடந்து செல்வார். இது இவருடைய ரௌண்ட்ஸ் பணிக்கு உதவியாக இருந்தாலும் மாணவர்களுக்குத் தொல்லையாக இருந்தது. ஏற்கனவே ஒரு முறை இவரால் தலைமை ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டது வேறு சுரேஷிற்கு ஞாபகம் வந்து தொலைத்தது. பயத்தில் எதுவும் பதறி அதனால் உளறி விடாமல் இருக்க அங்கே இருந்த பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். மெதுவாய் இவர்களது அறைக்கு வந்த பொன்னம்பலம் இரண்டு நிமிடங்கள் இவர்களது அறையையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். சுரேஷிற்கு இதயம் துடிக்கும் வேகத்திலேயே வெளியே வந்துவிடும் போலிருந்தது. நல்ல வேளையாக அவரால் இதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் அந்த இடத்தை விட்டு வேகமாய் சென்று விட்டார்.
.
அத்தியாயம் மூன்று
இந்நேரம் நமது மும்மூர்த்திகள் கடைத் தெருவை அடைந்து விட்டனர். பேருந்துனில் இருந்து இறங்கிய மூவரும் அங்கு படுத்திருந்த தெரு நாய் மிரண்டு எழுந்திருக்கும்படி புழுதி கிளப்பிக் கொண்டு ஓடினர். சுரேஷின் செருப்பு பிய்ந்து போயிருந்ததால் அவனால் வேகமாக ஓட முடியவில்லை. மிரண்டு எழுந்த நாய் சுதாரித்துக் கொண்டு சுரேஷை குரைத்துக் கொண்டே துரத்த ஆரம்பித்தது. இப்போது இவன் மிரண்டு போனான். பிய்ந்த செருப்பை நாய் மேலேயே வீசி எறிந்தான். நாய் சளைக்கவில்லை. இவன் கத்தி கூப்பாடு போட்டான். சத்தம் கேட்டு கணேஷும் ரமேஷும் திரும்பி பார்ப்பதற்குள் நாய் சுரேஷை நெருங்கி விட்டது. சுரேஷ் நாயிடம் சரணடைவதற்கு யோசித்துக் கொண்டிருக்கையில் கண் இமைக்கும் நேரத்தில் மற்ற இருவரும் சரமாரியாக கற்களை வீசத் தொடங்கினர். நாய் சரணடைந்து ஓடி விட்டது.சுரேஷிற்கு போன உயிர் திரும்பி வந்தது. ரமேஷிற்கோ கோபம் வந்தது. கணேஷிடம் “இவன கூப்பிடாதேனா கேட்டியா? இவனால் நம்ம வேல கேட்டுப் போகும் டா”. கணேஷுக்கு அவனை விட்டுக் கொடுக்க மனமில்லை. ரமேஷை சமாதானப்படுத்திவிட்டு சுரேஷை தோள் மீது கைப் போட்டு அழைத்துச் சென்றான். வர வேண்டிய இடம் வந்ததும் மளமள வென்று காரியத்தில் இறங்கினார்கள். கணேஷ் வெளியே நின்று யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அத்தியாயம் நான்கு
நிமிடங்கள் நேரங்களாய் உணரப்படும் தருணம். கணேஷ் மற்ற இருவரையும் தொடர்ந்து வேகப் படுத்திக் கொண்டிருந்தான். அப்போது தான் மதிப்பு மிக்க வார்டன் பொன்னம்பலம் தலைப்பட்டார். கடைத் தெருவின் இடது பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த அவர், தலையை ஒடுக்கிக் கொண்டு வலது பக்கத்தில் தனது கழுகுப் பார்வையை செலுத்தினார். அப்போது தான் கணேஷும் அவரை கவனித்தான். இப்போது இருவர் கண்களும் ஒன்றையொன்று நோக்கிக் கொண்டிருந்தன. அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. நண்பர்களை அழைப்பதற்கு முன் அவரே சத்தமாக “டேய்! இங்க என்னடா பண்றீங்க?. ஹாஸ்டல்ல இருந்து எப்படி மூணு பெரும் இங்க வந்தீங்க?”. நண்பர்கள் மூவரும் மவுனமாய் தாங்கள் ஆர்டர் செய்துருந்த பார்சல் பரோட்டாக்களை வாங்காமல், வார்டன் பார்த்துக் கொண்டிருக்க, ஹாஸ்டலை நோக்கி ஓடினர். வடை போன கதையாய் பரோட்டா மாஸ்டர் அவர்களை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.





 *******  *******   *******    *******     *******
ஐயோ என்னை அடிக்காதீங்க! இது கணேஷ் என்பவனால் என்னிடம் சொல்லப்பட்ட உண்மைக் கதை. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! J