நீண்ட நாளைக்கு பிறகு நான் எழுதியிருக்கும் இந்த பதிவிற்கு முன்னுரை எதுவும் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். உங்களை எனது வாழ்கையின் சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதே இந்த பதிவின் நோக்கம். பிடித்திருக்கோ, பிடிக்கலையோ உங்கள் கருத்துக்களை குத்துங்க. குத்துங்க நல்லா குத்துங்க.
---------------------------------------------
என் இதயம்...உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம்...தருவேன் நீ உடைக்கவே
ஹோ...ஹோசன்னா!!
- விண்ணைத் தாண்டி வருவாயா, 2010
மொழி புரியாமலே இந்த பாட்டை மிக ரசித்த ராகேஷ் மராத்தியன். பிறகு ஒரு நாள் இந்த படத்தை முழுக்கத் தமிழில் போட்டு தூங்க விடாமல் என்னை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச்செய்து கண்டு ரசிக்கும் அளவிற்கு கௌதம் மேனனின் ரசிகன் ஆனான். மங்களூர் வந்து கொஞ்ச நாட்களிலேயே பீச், உடுப்பி, பப்பாஸ்(pabbas is a famous ice cream parlour in Mangalore), பிக் சினிமாஸ் என்று சுத்த ஆரம்பித்தோம். அதிலும் முதல் முறையாக பப்பாஸ் சென்ற போது இரு பிகர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிடும் பாக்கியமும் வரப்பெற்றோம். பிறகு எனக்கு உடல் நலம் சரி இல்லாமல் போன போது, மருத்துவர்கள் மிகுந்த அவனது குடும்பத்திலிருந்து வந்த அறிவுரைகளினால் விலக ஆரம்பித்தான். நான் பின் வாங்கிவிட்டேன்.
பி.கு: இதை எழுதி முடித்த மறு நாளே ராகேஷிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது. இத்தனைக்கும் நான் இதை இன்னும் பதிவு செய்யவே இல்லை. ஆச்சர்யம் மற்றும் சந்தோஷமாய் இருக்கிறது.
**********
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
- வாரணம் ஆயிரம், 2008
இந்த பாட்டையும் சூர்யாவையும் மிக சிலாகித்து சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. என் வாழ்க்கையில் இதுவரை என்னிடம் அதிகம் பகிர்ந்து கொண்ட ஒரே தோழி. நாம் பேசிய நாட்களை விட பேசாத நாட்களே அதிகம். இருப்பினும் நட்பின் இழை உயிரோட்டமாகவே இருந்தது. நாம் பேசுவதை மற்றவர்கள் வெறித்து பார்ப்பதை வெறுத்தவள். எனது பிறந்த நாளின் போது பரிசளித்து ஆச்சர்யமூட்டியவள். எல்லா நல்ல விஷயமும் ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீர வேண்டும் போல. பிரிவு எங்கள் நட்பை களவாடிச் சென்றது. இன்று அவள் எங்கு, எப்படி இருக்கிறாள் என்பதை யாமறியோம். அவள் தந்த பரிசை பார்க்கும் போதெல்லாம் மெல்லிய வருத்தம் கலந்த புன்னகை எனது உதட்டில் தேங்கியிருக்கும்.
**********
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
- சில்லுனு ஒரு காதல், 2006
இந்த பாட்டை பத்து முறைக்கு மேல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் சிவா. “இன்னிக்குள்ள 4 test data prepare பண்ணனும் சிவா. எல்லாத்துக்கும் மேல build release பண்ணுவாங்க அத வேற டெஸ்ட் பண்ணனும். இப்பவே மணி ஏழு ஆகுது. போகிற போக்கை பார்த்தால் ராத்திரி பத்து மணிக்குத் தான் ரிலீஸ் பண்ணுவாங்க போல. ப்ளீஸ் சிவா வாங்க வேலைய பாக்கலாம்”. மனிதர் அசராமல் “அதுக்கென்ன பாத்துக்கலாம் ஸ்ரீராம்” என்றார். எனக்கு போரடித்தது. ஒரு வழியாக எட்டரை மணிக்கு test data prepare பண்ண ஆரம்பித்தால் எட்டே முக்கால் மணிக்கு அவசர அவசரமாக “வீட்டில் இருந்து அண்ணன் அழைத்தார், சாவியை நான் மறந்து போய் எடுத்து வந்து விட்டேன். திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று கிளம்பி விட்டார். இப்போது நான் எஸ்கேப் ஆகவும் முடியாது. ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து நான் கிளம்பும்போது மறு நாள் காலை அதிகாலை மணி மூன்று! இதை விட பெரிய காமெடி, கிளம்புவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன் மேனேஜர் எங்களிடம் சொன்னது “இப்போதே வீட்டுக்கு கிளம்பி விடுங்கள் காலையில் சீக்கிரம் வந்து விடுங்கள்!!”.
இப்படியாகப்பட்ட நட்பில் நானும் சிவாவும் நாளொரு testing ம் பொழுதொரு அரட்டையுமாய் வளர்ந்து(?) வந்தோம். யாராவது வந்து ஏதாவது உதவி கேட்டு விட்டால் போதும், மனிதர் உதவி செய்ய மதிப்பு கூட்டு வரியுடன் பீஸ் கேட்டு விடுவார். பெரிய ரகளையாய் இருக்கும் ஆபீசே. பின்னர் வேறொரு கம்பெனிக்கு சென்று விட்டார்.
இப்படிப் பழகியும் அவருடைய திருமணத்துக்குக் கூட என்னை அழைக்காத வண்ணம் நான் ஏதாவது பீஸ் பாக்கி வைத்திருக்கிறேனா என்று தெரியவில்லை. இன்று வரை நான் இவரை தொடர்பு கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றியடையவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் நானறியேன்.
**********
ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும்
ரூட்டு ஒண்ணுதான்
கேட்டு ஒண்ணுதான்
சிநேகிதா
- ஹே ராம், 2000
இப்படத்துக்கு என்னை வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயல நண்பன் கோபி செய்த முயற்சிகள் அனைத்தையும் தோல்வி அடையச் செய்தேன். காரணம், வீட்டில் சொல்லிவிட்டு A படத்துக்கு செல்ல எனக்கு கூச்சம் காரணமாக மனம் ஒப்பவில்லை. போதாததிற்கு தஞ்சை நகரின் சுவரொட்டிகள் வேறு படம் எப்படிப்பட்டது என்று பறையடித்துக்கொண்டிருந்தன. சொல்லாமல் செல்லவும் எனக்குத் தைரியமில்லை. ஆனாலும் கோபியுடன் பழகிய அந்த ஒரு வருடத்தில், ஆம் ஒரே ஒரு வருடம், அவ்வளவு நெருக்கமான தோழமை இருந்தது எனக்கு பின்னாளில் நினைக்கும்போது மிகுந்த ஆச்சரியமளித்தது. பெரும்பாலான நேரங்கள் ஒன்றாகவே இருந்திருப்போம். சண்டை போடுவதும் சமாதானமாவதும் எங்களில் நிதர்சனம். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சென்னைக்கு சென்று விட்டான். சென்ற பின் ஓரிரு முறை கடிதம் அனுப்பினான். அதற்கு பதில் எழுதக்கூட எனக்கு வக்கு இல்லாமல் போனது. அதை சரி செய்ய பிளஸ்-டூ முடித்த பிறகு அவனை சென்னையில் அவனது இல்லத்தில் சந்தித்தேன். அப்போதுதான் நான் இந்நேரம் மற்றும் எந்நேரமும் மூழ்கியிருக்கும் இணையக் கடலை(internet) அறிமுகப்படுத்தினான். அதுவே கடைசி சந்திப்பாய் இருக்குமென்று நினைத்ததில்லை. பின் எங்கே போனான் என்றே தெரியவில்லை. இவனை கண்டு பிடிக்க இவன் எனக்கு அறிமுகப் படுத்திய இணையமும் உதவவில்லை. But I still feel that you were my best friend. Looking forward for the day when I can meet you again.
**********
இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே
- இதயம், 1991
இந்தப் பாட்டு ஒன்றும் வைரவனுக்கு பிடித்த பாடல் இல்லை. ஆனால் ஏற்கனவே உடைந்து போயிருந்த எங்கள் நட்பு மேலும் விரிசலடைய இந்த படமும் ஒரு காரணமாகிவிட்டது. புரியவில்லையா? சரி, விஷயத்துக்கு வருகிறேன். ஒரு முறை டியூசன் வகுப்பில், பத்தாம் வகுப்பென்று நினைக்கிறேன், டீச்சர் வீட்டு டிவியில் இதயம் படம் ஆரம்பித்து இருந்தது. டைட்டில் இல் heart pulse ஐ போட்டுக் கொண்டு இருந்தார்கள். நான் சும்மா இல்லாமல் அருகில் இருந்த ஒருவனிடம் “அது என்ன தெரியுமா? அது தான் வைரவன் கையெழுத்து” என்றேன். மொத்த வீடே சிரித்து விட்டது. வெளியே போயிருந்த வைரவன் திரும்பி வந்து இதை கேள்விப்பட்டு நான் யாரிடம் இதை சொன்னேனோ அந்த அப்பாவியை வறுத்து எடுத்து விட்டான். என்னை முறைத்து விட்டு வேகமாய் சென்று விட்டான்.
**********
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
- அமர்க்களம், 1999
இவனது நடவடிக்கைகளுக்கும் மேற்கண்ட சினிமா பாட்டுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. ஏனென்றால் இவனுக்கு எந்தப் பாட்டும் பொருந்தாது; மேலும் அவ்வளவாய் சினிமா பார்த்தவனில்லை. எல்லாருக்கும் ஒரு பாட்டு வச்சுட்டு இவனுக்கு மட்டும் பாட்டு இல்லாம எப்படி எழுத?. சகோதரன் மற்றும் பாட்டியுடன் தஞ்சை வடக்கு வீதியில் தங்கியிருந்த பாஸ்கர் உடனான நட்பு நான்கு வருடம் நீடித்தது. படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் சேர்ந்தே தொடங்குவோம். Fevicol விளம்பரத்தில் சிறுவர்கள் முன்னால் புத்தகத்தை நோக்கி சாய்ந்து பின் சென்று மீண்டும் புத்தகத்தை நோக்கி சாய்ந்து oscillating pendulum முறையில் மனப்பாடம் செய்து படிப்பது போலவே இவனும் மனப்பாடம் செய்வான். மறந்தும் போவான். பத்தாம் வகுப்பிற்கு பிறகு கோபியைப் போலவே இவனும் சென்னை சென்று விட்டான் டிப்ளோமா படிக்க. நான், பாஸ்கர் மற்றும் வைரவன் ஆகிய மூன்று பேர் கொண்ட எங்கள் குழு பிரிந்தது.
**********
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
-காதலன், 1994
இந்தப் பாடலை மையமாகக் கொண்டு ஒரு பாட்டை கிறுக்கிக் கொண்டிருந்தான் வினோத். அப்போது அவன் பதினொன்றாம் வகுப்பு நான் ஆறாம் வகுப்பு. இருப்பினும் உரிமையில் ஒருமையில் அழைப்பேன் நான். இனிமேல் மரியாதையாய் அழைக்கப் போகிறேன். எதையும் முயன்று பார்க்கும் குணம் அவருக்கு. வித விதமாய் எதையாவது செய்து கொண்டேயிருப்பார். இஸ்ரோ விடும் ராக்கெட் மாடல் போலவே ராக்கெட் செய்து லைட் பிட்டிங்க்ஸ் எல்லாம் செய்து பவர் கட் சமயங்களில் டார்ச் லைட் ஆக பயன்படுத்துவார். எலெக்ட்ரிகல் விஷயங்களில் அபாரமான ஆர்வம் மற்றும் திறமை உண்டு. இவரும் நானும் சேர்ந்து அடிக்காத லூட்டி இல்லை. இன்னும் பல விஷயங்கள் இவரை பற்றி எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்னிடம். ஆயினும் மனிதர் இப்போது பக்கா குடும்பஸ்தர். அதனால் சென்சார்டு. இவர் எப்படி இந்த வரிசையில் என்று யோசிக்கிறீர்களா? நியாயமாய் கூடாது தான். ஆனால் இடையில் 12 வருடங்கள் இவரை பற்றி எந்த செய்தியும் இல்லாத நிலையில் இனிமேல் இவரை சந்திப்போமா என்ற ஐயம் இருந்தது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தான் எப்படியோ என்னை orkutஇல் கண்டுபிடித்து தொடர்பு கொண்டார் சிங்கப்பூரில் இருந்து. அதன் தொடர்ச்சியாய் கல்யாணபுரத்தில் (தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கு அருகில் உள்ள கிராமம்) உள்ள எங்கள் வீட்டிற்கு, மனைவி மற்றும் அழகான பெண் குழந்தையோடு வருகை தந்து இன்ப அதிர்ச்சி தந்தார். இந்த நண்பரை மீண்டும் தொடர்பு கொள்ள வைத்த புண்ணியத்துக்காகவே இன்றும் நான் orkutஐ யூஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன். God bless Orkut..oops. ரொம்ப லேட்டா சொல்லிட்டேனோ?
**********